Friday, August 24, 2012

பொண்ணு பாக்க வராங்களாம்!

நானே தவழ்ந்து பழகித் துணிந்தேன்..
நானே தவறி விழுந்து மீண்டும் எழுந்தேன்..
எண்ணமும், செயலும் ஒன்றொன்றாய் என்னுள் நானே செதுக்கியவை!
பல சமயம் என்னை நான் புரிந்துகொள்ளவே தடுமாரியதுண்டு!

வேதனைகளையும், வேடிக்கைகளையும்,
அழுகைகளையும், ஆரவாரங்களையும்,
அச்சங்களையும், ஆச்சர்யங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த உள்ளம்!
இருபது வயதுவரை நான் பயின்ற வாழ்க்கைப் பாடங்களை
இரண்டாம் பாக வாழ்க்கையில் செலுத்த
எனக்களித்த நேரம்
இருபது நிமிடம்!
ஆதாமும், ஏவாளும் ஜாதகம் பார்த்ததாய்த் தகவல் இல்லை..
கண்கள் உறவாடி காதல் பொழிய ஆண்மகனும் இல்லை..
கழுத்துவரை நீண்டு  கிடக்கின்றன  கடமைகள்..

சாஸ்த்திரங்களும், சம்பிரதாயங்களும்
சங்கடத்தை மட்டுமே பலமுறை அள்ளித் தெளிக்கின்றன..
சோற்றுக்கில்லாமல் சோர்ந்து கிடந்த வேளையிலும்
சும்மாய்க் கூட எட்டிப் பார்க்காத சொந்தம்
அன்றொரு நாள் மட்டும் ஒன்று கூடி
கேளிக்கையாய் அன்பு பாராட்டும்..
அன்று உடுத்தும் ஆடையிலும் கூட
அவர் விருப்பம் வேகமாய் விளையாடும்..
உலகின் இருபது நிமிட மவுசுக்காரர்கள்
யார் தெரியுமா?
பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டார்!

பஜ்ஜி, சொஜ்ஜியை நாம் அடுக்கி வைக்க
பவுனும், சொந்த வீடும் அவர் விரலில் கணக்காய்!
ஒரு ஜென்ம வாழ்க்கையை ஒரே  குவளைக்  காப்பிக்குள் அடக்கும்  
வேடிக்கை மனிதர்கள்!
என்னிடம் வெட்கத்தை எதிர் பார்க்கும் வேதனைக்குரிய மனிதர்களுக்கு மத்தியில்
வெப்பத்தில் தவிக்கும் இதயத்துக்கு
மௌனம் பழகிக்கொடுத்து
அதை நானும் சுமந்து கொண்டு
பொம்மலாட்ட பொம்மையாய்
சில நிமிடங்கள்!
என் சிந்தனைகள் காற்றில் சேர்த்த ஒரு குரல்..

சொல்லிவிடுமா?? உங்களுக்கு..
என் இருபது வயது வாழ்க்கையை ..
"இந்தக் கலர் புடவையும், போலிப் புன்னகையும்!"

-அங்கையற்கண்ணி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home