
என்ன இது வாழ்க்கை?
இன்னும் எத்தனை காலம்
இது இயற்கையில் பின்னி பிணைய போகிறது?
கவலைகளை கண்ட உடனே
கவி படைக்க தோன்றுகிறது எனக்கு
கவி படைப்பதால் மட்டுமே
கலங்கம் தீரப்போகிறதா?
கட்டாயம் இல்லை...
1-DEC-2010
காலச்சக்கரம் சுழன்று கொண்டிருக்கையில்
கணினி முன் அமர்ந்தபடி
அலுவலக வேலைக்கு ஒரு சில நிமிடம்
ஓய்வு கொடுத்தபடி
கொந்தளிக்கிற இதயத்துக்கு
மயிலிறகு கிட்டியும்
மருந்து கிட்டாமல்
முனுமுனுக்கிற ஒரு இளைங்கி தான் நான்!
கணினியிலே பல செய்தி படிக்க..
சர்ச்சைகள் சரமாரியாக சரசம் கொள்வதை
சங்கடத்துடனே இன்னும்
எத்தனை நாள் தான் பார்க்கப்போகிறோம்!
தள்ளு வண்டியில் செல்பவனுக்கு..
அடிபட்டுவிட்டதாம்..
அபாயக்கட்டமாம்..
மருத்துவமனையில் வசதியில்லையாம்..
வேறு இடத்துக்கு கொண்டு செல்கையில்..
வழியிலேயே இறந்து விட்டானாம்...
அவன் ஒருவனின் வருமானம் மட்டுமே
அவனுக்கும், அவன் மனைவிக்கும், ஆறு குழந்தைகளுக்கும் அடிப்படையாம்..
கண் கலங்கியது..
அவனுக்காய் அல்ல..
அவன் குடும்பத்துக்காய் அல்ல...
அவன் அறியமைக்காய்!!
பிள்ளை பெறுவது பெரிதன்று..
பேணி காப்பதே பெரிது..
இதை அறியவும் இல்லை.
அந்த அவசியமும் வரவில்லை..
கார்கிலில் கால் கடுக்க நிற்கும் இந்தியர் ஒரு புறம்...
கந்து வட்டி விட்டு
கொள்ளையடிக்கிற கூட்டம் மறுபுறம்...
ஓய்வே இல்லாமல்.
ஓலை குடிசையில் ஒப்பாரிகள் பல..
ஒபாமா வருகைக்காக ..
ஒரு நாடே ஒட்டு மொத்தமாய் உற்சாகத்தில் ஊற..
சினிமாவுக்குள் மூழ்கி முத்தெடுக்கும் மக்கள் அங்கே!
சில்லறை இல்லாமல் சிங்கி அடிக்கும் மனிதர்கள் இங்கே!
கோடி பணத்தை கொள்ளையடித்து
கோணிப்பையில் போடுகிறதொரு கூட்டம்..
கோணி பை தூக்கி குப்பை அள்ளுவதே
தொழிலாகிபோன மற்றொரு கூட்டம்...
லட்சியத்துடனும், கொள்கையுடனும் வாழும் ஜீவன்கள்..
லட்சங்களிலும், கோடிகளிலும் புரளும் ஜாம்பவான்கள்...
கர்நாடகவும், தமிழ்நாடும்
கட்டிபிடித்து கொள்ளும் நண்பர்கள்...
கண்ணீரை கூட பரிமாற்ற மாட்டார்கள்..
அதுவும் தண்ணீரன்றோ!
இங்கு
கல்லறைக்கும், கள்ள ஓட்டுக்கும்
என்ன பெரிய வித்தியாசம்
இரண்டும் பெருகி கொண்டு தான் போகும்!
இங்கு சுயம்வரம் கூட
சுட சுட
தொலைகாட்சியில் தொடர் கதையாய் வருகிறதே!
காக்கிச்சட்டையும், கதர்ச்சட்டையும்
கழற்றி மாட்டப்படும் ஆணியில்...
ஆஹா வருகிறது..
அப்பொழுது தான் அந்த மரியாதை...
மிண்மினி பூச்சியும்
மினுக்க மறுக்கிறது!
விவாகரதுக்கூட விசேஷமாக கொண்டாடப்படுகிறது...
விவாதங்கள் எல்லாம் காமிரா(Camera)க்குள் அடங்கிப்போகிறது!
வரலாறுகள் வற்றி போகிறது..
வம்சங்கள் வலுவிழந்து போகிறது...
இயற்கையை வம்புக்கிழுக்கிற கூட்டம் நாம்!
பணமும், புகழும் போர்வையாய் போர்த்தி
கொள்கிறோம்அதனால்தான் என்னவோ
தூக்கமும் தூரமாய் போய்
துணிச்சலாய் கேலி செய்கிறது!
"பாரதியும்" "காந்தியும்"
எம் பிள்ளைகளின் பாடப்புத்தகத்தில் மட்டும்
படித்து வராவிட்டால்
அடித்து விடுவோம்...
மிரட்டி மிரட்டி படிக்கவைத்ததால்
இவர்களும் கூட
"வில்லன்களாய் வளம் வருகிறார்கள்"
சிரிப்பே அறியாத சிறுவர்கள்...
கனவில் மட்டும் வாழும் கலைஞர்கள்..
அழுகையில் குளிக்கும் அகதிகள்...
சாபம் வாங்கி வந்த சாப்ட்வேர் என்ஜ்னியர்கள்...
போதையில் மூழ்கும் போலிச்சாமியார்கள்..
நடிக்கவே தெரியாத அந்த பல நடிகர்கள்...
துப்பாக்கியை தலையணையாய் வைத்துறங்கும் தீவிரவாதிகள்...
உணவிருந்தும் உடல் விற்கும் வேசிகள்..
பணமிருந்தும் பட்டினிகிடக்கும் பஞ்சப்பரதேசிகள்...
அரசியலே அறியாத சில அரசியல்வாதிகள்..
துணிந்து வாழ தெரியாமல் துறவரம் பூணும் துறவிகள்...
ஊழல்களையே ஊதியமாய் கொள்ளும் சில ஊழியர்கள்..
அனைத்தும் அறிந்தும் அமைதியாய் அமர்ந்திருக்கும் நம் அரசர்கள்...
நாம் பட்டு மெத்தை கேட்கவில்லை
படுத்துறங்க பாய் தான் கேட்டோம்!
பத்திரமாத்து தங்கம் கேட்கவில்லை
பஞ்சமில்லா பாரதம் கேட்டோம்!
நடமாடும் நகைக்கடை கேட்கவில்லை
நடமாட நல்ல நிலம் கேட்டோம்!
உல்லாச பயணம் கேட்கவில்லை
உணர்வுகளை மதிக்க கேட்டோம்!
ஒரு முறை பிறக்கிற இந்த பிறவியில்
ஓராயிரம் கொடுமைகளை தாங்க
ஒரே ஒரு இதயம் கொடுத்தது தான்
இயற்க்கை செய்த ஒரே சதி!
எங்கள் புன்னகையும்
குத்திக்காட்டுகிறது
"உனக்கெதற்க்கு சிரிப்பென்று?"
அழுகையுடன் ஆரம்பித்த பூமி வாழ்க்கை
அழுகையுடனே முடித்து வைக்கப்படுகிறது...
அத்தனைக்கும் மிஞ்சுவது
காணுகிற அந்த கலர் கனவு மட்டும் தான்..
இது காகித வாழ்க்கை..
எப்பொழுது வேண்டுமானாலும்
கிழித்தெரியப்படலாம்!!!
உண்மையை விற்று..
நியாயங்களை கொன்று..
அஹிம்சையை அடித்து விரட்டி..
நீதியை நிலை குலைப்பவர்களே...
இங்கு பரவிக்கிடக்கிறார்கள்...
பறந்து திரிகிறார்கள்...
பிரபலம் ஆகிறார்கள்...
விட்டுவிடுங்கள்...
வீசுகின்ற இந்த காற்றையவது
வீண் வட்டி இல்லாமல் - நிம்மதியாய்
சுவாசிக்க விடுங்கள்!!!
என்று மாறுமோ?
இந்த மாறாத பூமி...
கேள்விகளுக்குள் சிறு கண்ணீர் துளிகள் கலந்தபடி
-அங்கயற்கண்ணி